கொல்கத்தா
முதல் முறையாக கொல்கத்தா நகரில் தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காததால் மாசு ஏற்படுவது வெகுவாக குறைந்துள்ளது.
கொல்கத்தா நகரில் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது ஏராளமான பட்டாசு வெடிப்பது பல காலமாக வழக்கமாக இருந்தது. எனவே காற்று மற்றும் ஒலி மாசு இந்த தினங்களில் அளவுக்கு மிஞ்சிப் போவது வழக்கமாக இருந்தது. இதையொட்டி மேற்கு வங்க மாநிலம் முழுவதும், கொல்கத்தா உயர்நீதிமன்றம் பட்டாசு வெடிக்கத் தடை விதித்தது.
இந்த தடையை மாநிலம் எங்கும் குறிப்பாகக் கொல்கத்தா நகரில் வசிப்போர் முழுக்க முழுக்க பின்பற்றி உள்ளனர். காவல்துறையினரும் இதை கண்காணித்து வந்துள்ளனர். சில ஆயிரம் கிலோ பட்டாசுகளைக் கைப்பற்றிய கொல்கத்தா காவல்துறையினர் 294 பேரைக் கைது செய்துள்ளனர். எனவே சனிக்கிழமை இரவு முதல் பட்டாசு கொளுத்துவது அடியோடு நின்றது.
ஒரு சில இடங்களில் விதிமீறல் நிகழ்வுகள் இருந்தாலும் மொத்தத்தில் நகரில் பட்டாசுகள் வெடிக்காததால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படாத நிலை இருந்ததாகக் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு முக்கிய காரணம் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுதான் என அமைச்சர் ஃபிர்ஹாத் ஹகீம் புகழ்ந்துள்ளார்.