
ஜெனிவா: கொரோனா சிகிச்சைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மீது, மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அனைத்து முயற்சிகளுமே வீண்தான் என்று எச்சரித்துள்ளார் WHO நோய்த்தடுப்பு பிரிவின் இயக்குநர் கேட் ஓ’ பிரைன்.
“உறைய வைக்கும் இயந்திரம் அல்லது குளிர்சாதனப் பெட்டி அல்லது அலமாரியில் இருக்கும் ஒரு தடுப்பு மருந்தை, பயன்படுத்த ஆள் இல்லை என்றால், கொரோனாவை நம்மால் எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
எனவே, கொரோனா மருந்துகளின் மீது மக்களின் நம்பிக்கை மிக முக்கியம். மிகப்பெரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும்கூட, தடுப்பு மருந்து, ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டுமெனில், அதற்கு சிறிது காலம் எடுக்கும்.
தடுப்பு மருந்தை, யார் யாருக்கு முன்னுரிமை கொடுத்து விநியோகிக்க வேண்டும் என்ற விதிமுறையை WHO உருவாக்கியுள்ளது. அடுத்தாண்டு முடிவிற்குள், ஒவ்வொரு நாடும், தனது மக்கள்தொகையில் 20% பேருக்கு தடுப்பு மருந்து வழங்கியிருக்க வேண்டுமென்பதே எங்கள் இலக்கு.
அதேசமயம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் எளிதாக தொற்றக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதென்பது பெரிய சவால் மிகுந்த பணியாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார் பிரைன்.
[youtube-feed feed=1]