கல்பஜார்: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் வாழ்ந்த பகுதி, அஜர்பைஜான் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவிருப்பதால், அங்கிருந்து வெளியேறும் பூர்வகுடி ஆர்மீனியர்கள், தாங்கள் இதுவரை வாழ்ந்துவந்த வீடுகளை இடிக்கின்றனர் மற்றும் தீவைத்து அழிக்கின்றனர்.

கார்வச்சார் என்ற பெயருடைய அந்த கிராமத்தில், சுமார் 600 பூர்வகுடி ஆர்மீனியர்கள் வாழ்ந்து வருகின்றனர். நகோர்னோ-கராபாக் பிராந்தியத்தின் போர் முடிவடைந்த, கடந்த 1994ம் ஆண்டிலிருந்து இப்பகுதி ஆர்மினியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அப்போரின் முடிவில், நகோர்னோ-கராபாக் மட்டுமின்றி, அதனைச் சுற்றியப் பகுதிகளும் ஆர்மினியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. ஆனால், இருநாட்டு ராணுவத்திற்கு இடையே, நிலக்கட்டுப்பாடு தொடர்பாக, கடந்த செப்டம்பரில் மீண்டும் பெரியளவிலான மோதல் வெடித்தது.

இதன்விளைவாக, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த ஷுஷா என்ற நகரமே அஜர்பைஜானின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. அஸேரி கலாச்சாரத்தின் மையமாக கருதப்படுகிறது இந்த நகரம்.

இதனிடையே, ரஷ்யாவின் மத்தியஸ்தத்தில், இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நகோர்னோ-கராபாக் எல்லைக்கு வெளியே, கடந்த 1994ம் ஆண்டு ஆர்மீனியா கைப்பற்றிய பகுதிகள் திரும்பவும் அஜர்பைஜானுக்கே ஒப்படைக்கப்பட வேண்டுமென்று முடிவானது. இதனையடுத்து சண்டை நிறுத்தப்பட்டு அமைதி திரும்பியது.

அஜர்பைஜானிடம் ஒப்படைக்கப்படும் பகுதிகளில், கார்வச்சாரும் ஒன்று. இத்தனை நாட்கள் வாழ்ந்த பகுதிகளிலிருந்து தற்போது வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பூர்வகுடி ஆர்மீனியர்கள், தங்களின் வீடுகளை இடித்து எரித்துவிட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[youtube-feed feed=1]