மும்பை: கொரோனா காரணமாக மாநிலத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்களை, நவம்பர் 16ம் தேதி முதற்கொண்டு திறப்பதற்கு இசைந்துள்ளது மராட்டிய அரசு.
கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக, மராட்டிய கூட்டணி அரசு – பாரதீய ஜனதா இடையே கருத்து மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநில அரசுடன் ஆளுநரும்கூட முரண்பட்டார் இவ்விஷயத்தில். இந்நிலையில், இந்த அனுமதி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்து, கோயில்களை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தின் வழிபாட்டுத் தலங்களை, நவம்பர் 16 முதல் திறந்து கொள்ளலாம் என்றும், ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டுமென்றும், கொரோனா குறித்த இதர விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்றும் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.