ஸ்ரீநகர்: அரசியல் சார்பான வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை துவக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் சிறையிலிருந்து விடுதலையான காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி.
அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல் கவலையை அளிப்பதாக உள்ளது. எனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள், தங்களுக்கிடையிலான அரசியல் மாச்சர்யங்களை புறந்தள்ளிவிட்டு, மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்க வேண்டும்.
வாஜ்பாய் – முஷரப் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தையை துவக்குவது சிறப்பானதாக இருக்கும்” என்றார் முப்தி.
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலில், இந்திய தரப்பில் ராணுவத்தினர் உட்பட நான்கு பேரும், பாகிஸ்தான் தரப்பில் 8 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.