சென்னை: பாரதீய ஜனதா தலைவர்களுடனான சந்திப்பில், மாநிலம் தழுவிய வெற்றிவேல் யாத்திரைக்கு, முதல்வர் பழனிச்சாமி உறுதியாக அனுமதி மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதீய ஜனதாக் கட்சி நவம்பர் 6ம் தேதி துவங்குவதற்கு திட்டமிட்டிருந்த வெற்றிவேல் யாத்திரைக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. திருத்தணியில் பா.ஜ. மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அப்போது, காவல்துறைக்கும் பாரதீய ஜனதாவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான நேற்று(நவம்பர் 13), யாத்திரைக்கான அனுமதி தொடர்பாக, முதல்வர் பழனிச்சாமியை, மாநில பா.ஜ. தலைவர் முருகன் உள்ளிட்ட இதர பிரமுகர்கள் சந்தித்தனர்.
அப்போது, கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி, பொறுமையான முறையில், அதேசமயம் உறுதியான முறையில் அனுமதியை முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. யாத்திரை குறித்து பேசவேயில்லை என்று முருகன் கூறினாலும், உடன்வந்த ஒருவர் நடந்த விஷயத்தை வெளியே கசியவிட்டார்.
திருத்தணி கைகலப்பு குறித்து முதல்வரிடம் பேசப்பட்டபோது, பாரதீய ஜனதாவினர் எல்லை மீறியதே பிரச்சினைக்கு காரணம் என்று விளக்கம் தரப்பட்டது.
மேலும், தான் செல்லும் நிகழ்ச்சிகள் எதிலும், அரசோ அல்லது தனது கட்சியோ ஏற்பாடு செய்து மக்களை திரட்டவில்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் அப்படியானவைதான் என்றும் முதல்வர் தரப்பில் விளக்கம் தரப்பட்டதாம்.
அதேசமயம், வேல் யாத்திரை என்பது, முன்பே திட்டமிட்டு ஓரிடத்தில் மக்களைத் திரட்டுவதாகும். எனவேதான், கொரோனா விதிமுறைகளின்படி, இதற்கு அனுமதி தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டதாம். பாரதீய ஜனதா பிரமுகர்கள் முதல்வரிடம் சற்று சூடாக பேசினாலும், முதல்வர் நிதானம் இழக்கவில்லையாம்!