கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று புறநகர் ரயில் சேவை தொடங்கி உள்ளது.
அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு உள்ளன. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ரயில் சேவை இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் அனைவரும் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி உதவியுடன் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பயணிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க காவல்படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தென்கிழக்கு ரயில்வே கூறி உள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கில் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவை முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. தொற்று பரவல் குறைய தொடங்கியதால் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.