துபாய்: கடந்த மார்ச் மாதம் துவங்கி, இந்த ஆண்டின் முதல் பாதிக்குள்ளாகவே நடந்து முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர், கொரோனா பரவல் காரணமாக, ஆண்டின் கடைசிப் பகுதியில் அமீரக நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது பல்வேறு கட்டுப்பாடுகளுடன்.
இந்த ஆண்டின் மார்ச் மாத இறுதியில், கொரோனா காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே, ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இந்த 2020ம் ஆண்டில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படலாம் என்ற செய்திகளும் வெளியாகின.
ஏனெனில், ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை தொடரும், இந்த ஆண்டின் பிற்பாதியில் திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், ஐபிஎல் போட்டிக்காக, உலகக்கோப்பையை ரத்துசெய்யக்கூடாது என்ற குரல்களும் கேட்டன.
ஆனால், ஐபிஎல் என்பது பல்லாயிரம் கோடிகள் புரளும் மிகப்பெரிய வணிகம் என்பதால், இந்தாண்டிற்கான தொடரை எப்படியேனும் எங்கேனும் நடத்தியே தீருவது என்று பிசிசிஐ உறுதியாக இருந்தது. இந்நிலையில், கொரோனாவை காரணம் காட்டி, (உண்மையில் வேறு காரணம்?) டி-20 உலகக்கோப்பை தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது ஐசிசி.
இதனையடுத்து, ஐபிஎல் தொடருக்கு முன்னால் நின்ற பெரிய தடை நீங்கியது. இந்நிலையில், அமீரகம், இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஐபிஎல் நடத்திக் கொள்ளலாம் என்று அழைப்புகள் வந்தன. அமீரகத்தில் ஏற்கனவே ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் இல்லாமல், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, எப்படியோ ஒரு வழியாக, செப்டம்பரில் துவங்கி, நவம்பரில் நடத்தி முடித்துவிட்டது பிசிசிஐ அமைப்பு. இதன்மூலம் அவர்கள் நினைத்த வியாபாரம் நடந்து முடிந்துள்ளது!