வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றுவிட்ட டொனால்ட் டிரம்ப், தனது தோல்வியை அவ்வளவு எளிதாக ஒப்புக்கொண்டு அமைதியாகிவிட மாட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம்தான் புதிய அதிபர் பதவியேற்பு என்பதால், இன்னும் 10 வாரங்கள் வரை அதிபராக தொடர்வார் டிரம்ப். அந்த காலத்தில் அவர் எந்தவித நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று கணித்துள்ளனர் அவர்கள்.
தேர்தலில் முறைகேடுகளை செய்தே ஜனநாயகக் கட்சியினர் வென்றனர் என்ற குற்றச்சாட்டை பெரியளவில் முன்வைப்பார். அவரால் நியமிக்கப்பட்ட பல்வேறு மூத்த நிர்வாக அதிகாரிகளை பணிநீக்கம் செய்வார் என்று தெரிவிக்கிறார்கள்.
அந்த அதிகாரிகள் அவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்தான் என்றாலும், அவர் எதிர்பார்த்த அளவிற்கு விசுவாசமாக இல்லாதவர்கள் மற்றும் அவர் சொன்னதையெல்லாம் செய்ய மறுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில், எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ராய், பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் எஸ்பர், சிஐஏ இயக்குநர் ஜினா ஹேஸ்பல் உள்ளிட்ட முக்கியமானோர் அடக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த விஷயத்தில் டிரம்ப் நினைத்ததையெல்லாம் செய்துவிட முடியாது என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. ஏனெனில், அவரின் பல நிர்வாக உத்தரவுகளை ஃபெடரல் நீதிமன்றங்கள் ரத்துசெய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.