சென்னை:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பெற்றுள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியின் காரணமாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இவர்களது வெற்றிக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலில் தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை தமது அடுத்த துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.