சென்னை: மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் வகையில், தற்போது மெரினா இணைப்புச் சாலையில், மீன் விற்பனை செய்யும் மீனவர்கள், நான்கு மாதங்களுக்குள் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று சென்னை மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மீனவர் சமூகப் பிரிவுகள் இந்த இடமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதாய் சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்படுகையில், மீனவர் யூனியன் உறுப்பினர்களோ, அப்படியான ஒப்புதலை தாங்கள் வழங்கவில்லை என்கின்றனர்.
அதேசமயம், இந்த இணைப்புச் சாலை போடப்படுவதற்கு வெகு முன்னதாக இருந்தே, பல பத்தாண்டுகளாக இந்த இடத்தில் மீன் விற்பனை செய்து வருகிறார்கள் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், அவ்விடத்திலிருந்து மீனவர்கள் உறுதியாக வெளியேற்றப்படுவார்கள் என்றுள்ளது சென்னை மாநகராட்சி.
இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மீனவர்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது நீதிமன்றம்.
சென்னை மாநகர கமிஷனர் மற்றும் காவல்துறை கமிஷனர் ஆகியோர், அப்பகுதியில் காலைநேர நடைப்பயணம் மேற்கொண்டு, அந்த இணைப்பு சாலையில் ஆக்ரமிப்பு இல்லாததை உறுதிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது நீதிமன்றம்.