துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள அணிகள் எவை என்று தெரிந்துவிட்டன.

அதேசமயம், கடைசி லீக் போட்டிக்கு முந்தைய நிலவரப்படி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள், தலா 14 புள்ளிகளுடன், முறையே மூன்றாவது மற்றும் நான்காமிடத்தில் இருந்தன.

கடைசிப் போட்டியில், ஐதராபாத்தை மும்பை வென்றாலோ அல்லது ஐதராபாத் அணி தட்டுத்தடுமாறி மும்பையை வென்றாலோ, கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் வாய்ப்பிற்கும், பெங்களூரு அணியின் மூன்றாமிடத்திற்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற நிலைதான் இருந்தது.

ஆனால், நடந்த கதையே வேறு. மும்பை அணி நிர்ணயித்த இலக்கான 149 ரன்களை, 17 பந்துகள் மீதமிருக்கையிலேயே 1 விக்கெட்டைக்கூட இழக்காமல் எடுத்து, கடைசிப் போட்டிவரை ஆறாவது இடத்திலிருந்த ஐதராபாத் அணி, சல்லென்று மேலேறி மூன்றாமிடத்திற்கு வந்துவிட்டது.

மூன்றாமிடத்திலிருந்த பெங்களூரு கீழிறங்கி, நான்காமிடத்திற்கு வர, நான்காமிடத்தில் ஒட்டிக்கொண்டு பிளே-ஆஃப் ஆசையிலிருந்த கொல்கத்தாவோ, ஐந்தாமிடத்திற்கு வந்து வீட்டுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.

அதேசமயம், புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால், பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்றுமே 14 புள்ளிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணிகளின் ரன் ரேட்தான் தலையெழுத்தை தீர்மானித்துவிட்டது.