சென்னை: தமிழகத்தில், இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேவர்ஜெயந்தி நிகழ்வுகள் அரசியலாக்கப்பட்டு, சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது.
இந்து மதத்தின் மனுதர்மம், பெண்களை இழிவுபடுத்துகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொளுத்திப்போட்ட பட்டாசு இன்று வரை புகைந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக இந்து மக்களிடையே அதிருப்தி நிலவி வரும் நிலையில், தற்போது தேவர் ஜெயந்தியை வைத்தும் அரசியல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 30ந்தேதி நடைபெற்ற தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள தேவர் சமாதியில் மரியாதை செய்த திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட விபூதியை, அவர் நெற்றியில் பூசாமல் கீழே வீசியது சர்ச்சையானது.
இந்த நிலையில் பசும்பொன்னில் உள்ள தேவர் சமாதிக்கு மரியாதை செலுத்தச் சென்ற பாஜக மூத்த உறுப்பினர் எச்.ராஜா, அங்கு கைகூப்பி வணங்காமல் நின்றதும் சர்ச்சையாகி உள்ளது.
ராஜாவின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துளள தமிழ்நாடு பிராமணர் சங்கம், மனுதர்மப்படி வர்ணாசிரமப்படி குலப் பெருமையை எச்.ராஜா காப்பாற்றிவிட்டதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் சாதிய மோதல்களை தூண்டிவிடும் நோக்கத்தில் பிராமணர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன், ஜாதி காரணமாக அவமதிக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. பின்னர் நயினார் நாகேந்திரன் முயற்சியால் எல்.முருகனுக்கும் சால்வை அணிவிக்கட்டு மரியாதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், எச். ராஜா ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது, நயினார் நாகேந்திரனும் எல். முருகனும் தேவர் சிலையை பார்த்து கை கூப்பி வணங்கினர். ஆனால் ஹெச். ராஜா மட்டும் தேவர் சிலையை கை கூப்பி வணங்காமல் இருந்தார். இதனை முன்வைத்து பிராமணர் சங்கத்தினர் எச். ராஜாவை பாராட்டி இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது.
அதில், எச்.ராஜா தேவர் சமாதியில் மரியாதை செய்யும் புகைப்படத்துடன், பிராமணர்களை விட தாழ்ந்த வர்ணத்தில் பிறந்த ஒருவரை வாக்கரசியலுக்காக கைக் கூப்பி வணங்காமல் பிராமணர் குலப் பெருமையை காத்த ஹெச். ராஜா அவர்களை தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் மனமுவந்து பாராட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thamizhnadu Brahmins Assosciation (Thambrass) பெயரில் இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த போட்டோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசியல் களத்தில் சிலஅமைப்புகள் சாதிய மோதல்களையும், மத வேற்றுமைகளையும் தூண்டிவிட்டு குளிர்காய நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், பிராமணர் சங்கத்தின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அமைதிக்கு பெயர்போன மாநில மாநிலமான தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெற்று சாதி, மத, இன ரீதியிலான பேச்சுக்கள், புகைப்படங்கள், விமர்சனங்கள் போன்றைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சர்ச்சைகள் மீது தமிழகஅரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, அமைதி நிலவ ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.