பாட்னா

பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் கூறிய வாசகங்களை ரா ஜ த தலைவர் லாலு பிரசாத் யாதவ் கிண்டல் செய்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் சுமார் ரூ.33.67 கோடி அளவிலான கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்   அவருக்குக் கடந்த மாதம் 9 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது   ஆயினும் மற்றொரு வழக்கு தொடர்பாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.  சமீபத்தில் நடந்த பேரணியில் ராகுல் காந்தியிடம் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தனது பிறந்த நாளான நவம்பர் 9 அன்று தனது தந்தைக்கு ஜாமீன் கிடைக்கும் எனவும் அடுத்த நாள் நவம்பர் 10 அன்று முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவர் விடை கொடுப்பார் எனவும் தெரிவித்தார்.

பாஜக தேர்தல் பிரசாரத்தில் சாப்ராவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு இரட்டை எஞ்சினாக செயல்படுகிறது என்பதால் தாம் இரட்டிப்பு சக்தியுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.  மேலும் எதிர்க்கட்சியில் உள்ள தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தங்களைக் காக்க ஆட்சியைப் பிடிக்க முயல்வதாகவும் மோடி தெரிவித்தார்.

சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் தனது டிவிட்டரில், “மோடி அவர் குறிப்பிட்டது போல டபுள் எஞ்சின் இல்லை.  டிரபுள் எஞ்சின். ஊரடங்கு நேரத்தில் வெளி மாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களைக் கொண்டு வர இந்த டபுள் எஞ்சின் என்ன செய்தது? “ எனக் கிண்டலாகப் பதிந்துள்ளார்.