சென்னை: இனப்பெருக்கத்திற்காக ஜெர்மன் நாட்டில் இருந்து 105 காளை மாடுகளை தமிழகஅரசு இறக்குமதி செய்துள்ளது. இந்த காளைகள் விமான நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் பால்உற்பத்தியை பெருக்கும் வகையிலும், மாடுகளிடையே இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் வெளிநாடுகளில் இருந்து காளைகள், பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்சி இன மாடுகள் விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை தேசிய பால்வள அபிவிருத்தி வாரியத்தின் அனுமதியுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
அதன்படி, தற்போது இனப்பெருக்கத்திற்காக 105 ஜெர்மன் நாட்டு காளை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த காளை மாடுகள் வீடு போன்று அமைக்கப்பட்டுள்ள மரப்பெட்டிகளில் நிற்க வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு மரப்பெட்டியிலும் மூன்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காளை மாடுகள் கொண்டு வரப்பட்ட பெட்டிகள் அனைத்தும், தற்போது சென்னை விமான நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்டு உள்ளன. அவை சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்தின் பால் பண்ணைக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.