பாட்னா :
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில், தலைவர்களை தனிப்பட்ட முறையில் குறி வைத்து .அனைத்து கட்சிகளுமே விமர்சனம் செய்து வருகின்றன.
பீகார் முதல்- அமைச்சர் நிதீஷ்குமாரும்,இதற்கு விதி விலக்கல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்கு போகும் இடமெல்லாம், நிதீஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர்களை விளாசி வருகிறார்.
நிதீஷின் நீண்டநாள் நண்பரான, முன்னாள் முதல் –அமைச்சர் லாலு பிரசாத் யாதவும், நிதீஷ்குமாரின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
பார்பட்டா என்ற இடத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய நிதீஷ்குமார் “எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் எந்த நல்ல காரியமும் செய்ய தெரியாது. தெரிந்தாலும் செய்ய மாட்டார்கள். சும்மா பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் ஊராட்சிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது உள்ளிட்ட பல திட்டங்களை, நான் முதல்-அமைச்சரான பிறகு கொண்டு வந்துள்ளேன்” என தெரிவித்தார்.
“ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போன ஒருவர் (லாலு பிரசாத் யாதவ் ) தான் அமர்ந்த முதல்-அமைச்சர் நாற்காலியில் தனது மனைவியை அமர்த்தி விட்டு சென்றதை தவிர பெண்கள் வளர்ச்சிக்கு எதுவும் செய்ததில்லை’’ என நிதீஷ்குமார் குற்றம் சாட்டினார்.
ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறைக்கு சென்றபோது, தனது மனைவி ராப்ரிதேவியை முதல் –அமைச்சராக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பா.பாரதி