மதுரை: பசும்பொன்னில் உள்ள தேவர்சிலைக்கு முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 113-வது ஜெயந்தி விழா, 58-வது குரு பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இது அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று மாலை மதுரை சென்ற முதல்வர், இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது, அவருடன் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களும் சென்று மரியாதை செய்தனர்.
அதைத்தொடர்ந்து, இன்று காலை அரசு சார்பில் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்க, காலை 9 மணிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
தேவர்ஜெயந்தியை முன்னிட்டு, இன்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக நிர்வாகி எல்.கே.சுதீஷ், கருணாஸ் எம்எல்ஏ ஆகியோரும், சமுதாய அமைப்பின் தலைவர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்காக மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கி உள்ளது. அந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்ண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 8,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 வெடிகுண்டு துப்பறியும் குழுவினர், 9 துப்பறியும் மோப்ப நாய் படை குழுவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பசும்பொன் மற்றும் கமுதியில் 200 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 151 பகுதிகள் தடை செய்யப்பட்ட வழித் தடங்களாகவும், 131 இடங்கள் பதற்றமான பகுதிகளாகவும் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. மேலும் ஆளில்லாத விமானங்கள் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.