டில்லி
கட்டுமான பணிகளை 12 வருடங்கள் தாமதப்படுத்திய அதிகாரிகளின் புகைப்படங்களை அங்குத் தொங்க விடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
அரசு சார்பில் நடக்கும் பல கட்டுமான பணிகள் குறிப்பிட்ட கால கட்டத்தில் முடிவடைவதில்லை. இதனால் திட்டமிட்ட தொகை பல மடங்கு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு தாமதமாக முடிக்கப்படும் கட்டிடங்களைத் திறந்து வைக்கும் அமைச்சர்கள் இது குறித்து ஒன்றும் தெரிவிக்காமல் பெருமையுடன் கட்டிடங்களை திறந்து வைப்பது இன்னொரு வழக்கமாக உள்ளது.
டில்லியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமை அலுவலக கட்டிடத்தை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் திறந்து வைத்துள்ளார். இந்த கட்டடப்பணிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 12 ஆண்டுகளில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய நிதின் கட்கரி தனது தனித்தன்மையை உரையில் காட்டி உள்ளார்
நிதின் கட்கரி தனது உரையில், “சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள இந்த கட்டிட பணிகள் 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி 2011 ல் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதுவரை இரு அரசுகள் மாறி உள்ளன. மற்றும் 8 துறை தலைவர்கள் மாறி உள்ளனர்.
தற்போது உள்ள துறைத்தலைவரும் அதிகாரிகளும் இதற்குப் பொறுப்பு இல்லை எனக் கூறலாம். ஆனால் இதுவரை பணியாற்றிய அத்தனை அதிகாரிகளின் புகைப்படங்களும் இங்குத் தொங்க விடப்பட்டு இந்த பணியைத் தாமதப்படுத்தியவர்கள் எனக் குறிப்பிட வேண்டும்.
நாம் டில்லி மும்பை அதிவேக சாலையை மூன்று வருடத்தில் முடித்ததை நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். அந்த திட்டத்தின் மதிப்பு ரூ80000 முதல் ரூ. 1 லட்சம் கோடிகள் ஆகும். ஆனால் ரூ.250 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகளை இத்தனை வருடங்களாக செய்துள்ளோம் என்பது நமக்கு அவமானம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.