டெல்லி: வெங்காய விதை ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரையிலான காரீப் பருவத்தின் இறுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக விளைச்சலும் குறைந்தது.
ஆகையால், வெங்காயத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக வெங்காயம் விலையில் உயர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். விலை உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய விதிமுறைகள் மத்திய அரசால் தளர்த்தப்பட்டது. ஆப்கானிஸ்தான், எகிப்து உள்ளிட்ட நாடுகளிடமிருந்து வெங்காயம் இறக்குமதியாகும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந் நிலையில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் விதையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறை படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.