பெங்களூரு: கேரள மாநிலத்தை உலுக்கி எடுக்கும் தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக, கம்யூ.செயலாளர் மகன் பினீஷ் கோடியேரி கர்நாடக மாநில அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் கர்நாடக மாநில போதைப்பொருள் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது கேரள மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மாநில முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆளும் கட்சியான மார்ச்சிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளது மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணனின் 2வது மகன் பினீஷ் கோடியேரி. இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பெங்களூரு, சென்னை உட்பட பல இடங்களில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.
இவர், கேரள தங்கம் கடத்தல் வழக்கில், சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பினீஷ் கொடியேரிக்கும் சம்பந்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே போதை பொருள் கடத்தல் வழக்கில், கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவை சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பினீஷ் கொடியேரியிடமும் விசாரணை நடத்த வேண்டும் என மாநில காங்கிரஸ், பாஜ உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன .
இந்த நிலையில், தங்கக்கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்து சுமார் கிலோவுக்கும் மேல் நகைகள் மற்றும் ஒருகோடிக்கும் மேல் பணம் கைப்பற்றினர் இதுதொடர்பாக என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தின. அப்போது, மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தை ஒப்பந்தம் எடுத்த துபாயைச் சேர்ந்த நிறுவனம் அன்பளிப்பதாக கொடுத்த பணம் என்றும், மேலும், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் விசா ஸ்டாம்பிங் செய்யும் பணியை குத்தகைக்கு எடுத்த சில நிறுவனங்கள் கொடுத்த கமிஷன் தொகை என்றும் கூறியதாக தகவல் வெளியானது.
ஆனால், இந்த நிறுவனம் ஒன்றில், பினீஷ் கோடியேரிக்கும் முதலீடு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 10 மணி நேரம் அவரிடம் விசாரனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பினீஷ் கொடியேரி கர்நாடக மாநில போதைப்பொருள் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.