தெலுங்கு சினிமாவின் பெண் சூப்பர்ஸ்டார் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட விஜயசாந்தி, பா.ஜ.க,வில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அவர், அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே உள்ளார்.
அவரை மீண்டும் பா.ஜ.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள விஜயசாந்தியின் இல்லத்தில் அவரை, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கடந்த திங்கள் கிழமை சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதனால் அவர் பா.ஜ.க.வில் மீண்டும் இணையப்போவதாக செய்திகள் பரவின .
இந்நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஜெட்டி குசும குமார், நேற்று விஜயசாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குசும குமார்,’’ சோனியா காந்தி மீதும், ராகுல் காந்தி மீதும் நல்ல மரியாதை வைத்துள்ள விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளார்’’ என்று தெரிவித்தார்.
‘’கொரோனா பரவல் காரணமாக விஜயசாந்தி அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார் ’’என்று குமார், மேலும் குறிப்பிட்டார்.
விஜயசாந்தியை காங்கிரஸ் செயல் தலைவர் சந்தித்து பேசியதால், அவர் பா.ஜ.க.வில் சேரப்போவதாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-பா.பாரதி.