சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன் காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல், சென்னை உள்பட பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது என்றும், அடுத்து வரும் 2 நாட்களுக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கனமழையை பொறுத்தவரையில் திருநெல்வேலி, விருதுநகர், தென்காசியில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.
ஆனால், வானிலை அறிவிப்பு மாறாக, நேற்று சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனழமை கொட்டி வருகிறது.
இந்த நிலையில், மூன்று மணி நேரத்திற்கு சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.