கவுகாத்தி:
அஸ்ஸாமில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், போலியான நபரை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கவுகாத்தி காவல் துறையினர் தெரிவிக்கையில், அந்த நபர், நுழைவுத் தேர்வை எழுத ப்ராக்ஸியைப் பயன்படுத்தியுள்ளார். இதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் தேர்வில் 99.8 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தில் தேர்வு எழுதிய அந்த நபர் நீல் நக்ஷத்ரா தாஸ், அவரது தந்தை டாக்டர் ஜோதிர்மோய் தாஸ் மற்றும் ஒரு சோதனை மையத்தின் ஊழியர்களான ஹமேந்திர நாத் சர்மா, பிரஞ்சல் கலிதா மற்றும் ஹிருலால் பதக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக குவஹாத்தி போலீசார் தெரிவித்தனர். மேலும் கைதான அனைவரும், உள்ளூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கவுகாத்தி போலீஸ் கமிஷ்னர் எம்பி குப்தா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அஸ்ஸாமில் ஜே.இ.இ தேர்வில் முதலிடம் வகித்தவர் மீது அசாமில் உள்ள காவல்துறையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சார்பாக தேர்வில் எழுதியவர் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் என்றார். குவஹாத்தியில் உள்ள சோதனை மையத்தின் ஊழியர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய பலரை தேடி வருகிறோம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பான புகாரை, கடந்த வாரம் மித்ராதேவ் ஷர்மா என்பவர், வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டவர் தேர்வில் முதலிடம் பிடிப்பதற்கு தவறான வழிகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மோசடிக்கு தேர்வு மைய இன்விஜிலேட்டர் உதவியதாகவும், தேர்வு மையத்திற்கு சீல் வைக்கப்பட்டு நிர்வாகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அசாம் காவல் துறையினர், என்.டி.ஏ வுக்கு தகவல் அளித்துள்ளனர்.