தமிழக முன்னாள் காங்கிரஸின் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 18வது நினைவு நாள் இன்று. தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர் பதவியை துச்சமென தூங்கி எறிந்து தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர். விவசாயிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வாழப்பாடியார்.
1940ம் ஆண்டு ஜனவரி 18ந்தேதி அன்று, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்த வாழப்பாடியார், தனது 19 வயதில் இருந்தே தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1959ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இணைந்த அவர், பின்னர் 1960ம் ஆண்டு அதில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப்பிரிவான ஐ.என்.டி.யூ.சியின் தலைவராகப் பணியாற்றினார். பிறகு காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1977 பொதுத்தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991-92ம் ஆண்டு பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார்.
1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரசு எத்தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார்.
1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999 பொதுத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம் பெற்றார்
பின்னர், 2001ம் ஆண்டு தனது , தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கட்சி யான காங்கிரசில் இணைந்து சேவையாற்றி வந்தார். வாழப்பாடியாரின் சுறுப்பான அரசியல் பணி, அவர் பொதுமக்களை அணுகும்விதம் போன்ற பன்முகத்தன்மை காரணமாக அவருக்கு காங்கிரஸ் தலைமை இளைஞர் காங்கிரஸ் பொறுப்பு வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் 2002ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மரணத்தை தழுவினார். அவருடைய இழப்பு தமிழக காங்கிரசுக்கும், விவசாயிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்தது.
6 முறை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், 6 முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
வாழப்பாடியார் பி.வி.நரசிம்மராவ் (1991-92) தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தபோது, தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தலைவிரித்தாடியது.
அப்போது காவிரி பிரச்சினை விஷயத்தில், மத்திய காங்கிரஸ் அரசு கர்நாடகா காங்கிரஸ் மாநில அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. அப்போது, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக இருந்த, வாழப்பாடியார், காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தனது பதவியை உதறித்தள்ளினார்.
இதன் காரணமாக வாழப்பாடியாருக்கு தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் கிடைத்தது. அவரது பூத உடல் மறைந்திருந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது. காவிரி உள்ளவரை வாழப்பாடியாரும் புகழும் நிலைத்து நிற்கும்… தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.
அரசியல் என்பதே பதவிக்காக என்று மாறிவிட்ட நிலையில், பொதுப் பிரச்சினைக்காக தனது பதவியை உதறிய இவரது செயல் இன்றும் வியப்படன் பார்க்கப்படுகிறது. இன்றளவும் அவரது புகழ் நிலைத்து நிற்கிறது.