துபாய்: நிறவெறிக்கு எதிரான இயக்கமான ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்பதற்கு, இந்த ஐபிஎல் தொடரில் ஆதரவளித்த முதல் வீரரானார் மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அபாரமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா, 21 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். அவர் தனது பேட்டிங்கின்போது, அரைசதம் அடித்தவுடன், மண்டியிட்டு, தனது வலக்கரத்தை உயர்த்தி, அந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
கேலரியில் அமர்ந்திருந்த தனது அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்டை நோக்கி சைகை காட்டி, அவர் தனது உடல்மொழியை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலளிப்பாக, தனது வலது முஷ்டியை உயர்த்தி பொல்லார்டு மரியாதை செய்தார்.
ஹர்திக் பாண்டயாவின் இந்த செயல், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில், கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் காவல்துறையால் கொல்லப்பட்டவுடன், பல விளையாட்டு வீரர்கள் நிறவெறிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.