ஜம்மு :
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தின் கொடியையும் மத்திய அரசு விலக்கிகொண்டது.
அப்போது, அந்த மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முப்தி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது “ஜம்மு – காஷ்மீரின் கொடி எங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரை நான் மூவர்ணக்கொடியை தொட மாட்டேன். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தும், எங்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட கொடியும் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அஷ்வானி குமார் என்பவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தேச விரோத கருத்துக்களை கூறியுள்ள மெஹ்பூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்..
“நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்து மெஹ்பூபா கருத்து தெரிவித்துள்ளார். எனவே அவரது கட்சியின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
– பா.பாரதி