ம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டபோது, அந்த மாநில முன்னாள் முதல்-அமைச்சர் மெஹ்பூபா முப்தி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதோடு, காஷ்மீர் மாநிலத்துக்கு என இருந்த தனிக்கொடியும், விலக்கி கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், 14 மாதங்கள் காவலில் இருந்த மெஹ்பூபா அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பின் முதன் முறையாக அவர் ,நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவரது மேஜையில் காஷ்மீர் கொடி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கொடியை சுட்டிக்காட்டிய மெஹ்பூபா முப்தி’’ இந்த கொடி எங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரை நான் மூவர்ணக்கொடியை தொட மாட்டேன். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தும்,எங்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட கொடியும் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்கப்படும் வரை நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்’’ என ஆவேசமாக தெரிவித்தார்.
‘’ இந்த அரசாங்கத்தில் காஷ்மீர் மக்கள் சவுகரியமாக இல்லை..’’ என்று குறிப்பிட்ட மெஹ்பூபா’’ காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்காக ,இங்குள்ள தலைவர்கள் தியாகம் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது’’ என்றார்.
-பா.பாரதி.