புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் டிசம்பர் 1ந்தேதி முதல் மருத்துவக்காப்பீடு திட்டம் (Medical insurance) கொண்டுவரப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்து உள்ளார். மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ள நிலையில், அடுத்ததாக மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் பிரதமரின் மருத்துவக்காப்பீட்டுத் (ஆயுஷ்மான் பாரத்) திட்டம் 1.03 லட்சம் பேருக்கு மட்டுமே பொருந்துகிறது. மீதமுள்ள 2.60 லட்சம் பேருக்கும் மாநில அரசு சாா்பில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டம் போல, இதிலும் ரூ. 5 லட்சம் வரை பொதுமக்கள் மருத்துவ காப்பீடு பெற முடியும். இதற்காக அரசு ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதாக முதல்வர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த திட்டம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக, திட்டம் அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், டிசம்பவர் 1ந்தேதிமுதல் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் குடும்பங்கள் (ரேஷன் கார்டுகள்) உள்ளன. இதில், 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் மட்டும், மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு தேர்வுவாகி உள்ளன. மீதமுள்ளவர்களுக்கு மாநில அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை செய்லபடுத்தும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.