நாமக்கல்: சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட ஒகேனக்கல் பகுதியில் 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரை நீச்சல்குளம், சினிமா தியேட்டர் தவிர மற்ற அனைத்து பொழுதுபோக்கு இடங்களுக்கும் தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஏற்கனவே ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட போதும் ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.
சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல் இயங்கவும், ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும், மசாஜ் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், மக்கள் முகக்கவசம் உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக சுற்றுலா செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.