துபாய்: விசா விதிகளை மதிக்காத 206 பாகிஸ்தானியர்கள், 66 இந்தியர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர்.
துபாய் சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் புதிய அறிவுறுத்தல்களின் படி, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வருகை மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் வரும்போது திரும்பிச் செல்லும் வகையில் உள்ள விமான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.
இந்த விதிகளை பின்பற்றாத பயணிகள் புறப்பட்ட இடத்திற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று விமான நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் விசா விதிகளை மதிக்காமல் 206 பாகிஸ்தானியர்கள் மற்றும் வருகை விசாக்களுடன் 66 இந்தியர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து சிக்கித் தவிக்கின்றனர்.
இது குறித்து துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நுழைவு மறுக்கப்பட்ட 1,019 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர், மீதமுள்ள 206 பேர் அடுத்த 12 மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகள் கவனிக்கப்பட்டு வருகின்றனர் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் தூதரகம், தகவல் மற்றும் கலாச்சாரத் தூதர் நீரஜ் அகர்வால், விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 66 இந்திய பயணிகள் சிக்கித் தவிப்பதை உறுதிப்படுத்தினார். டெல்லியில் இருந்து கோ ஏர் விமானத்தில் பறந்த சுமார் 59 பயணிகள் இப்போது 48 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கி தவிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
இது குறித்து அகர்வால் மேலும் கூறியதாவது: பயணிகள் தவிக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், எங்கள் அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்திற்கு வந்தார்கள். சிக்கித் தவிக்கும் பயணிகள் அனைவரும் உறுதிப்படுத்தப்பட்ட திரும்ப டிக்கெட்டுகளை எடுத்துச் சென்றார்கள் என்பதையும், பலர் போதுமான பணத்தையும் எடுத்துச் சென்றதையும் நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.
பயணிகளுக்கு உணவு, பிற பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பிரச்னையை துபாயில் உள்ள இந்திய தூதரகம் ஐக்கிய அரபு எமிரேட்சின் குடிவரவுத் துறையின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
கடந்த வாரம், பயணத்திற்கு முந்தைய விதிமுறைகளை பின்பற்றாததற்காக ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டனர். அப்போது முதலே, விமான நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்கள் பயணிகளுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பணத்தை வைத்திருக்குமாறு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.