மதுரை: டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் தரலாம் என்றும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், பருவ தேர்வில் சில படங்களில் தோல்வி அடைந்ததால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்த்தாகவும், ஆனால், கொரோனா பொதமுடக்கம் காரணமாக மறுமதிப்பீடு முடிவுகள் தாமதமாக வந்தது. அதிலும், தான் மறு தோல்வி அடைந்தது தெரிய வந்தது. ஆனால், அதற்குள் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்த இருந்த கால அவகாசம் முடிந்து விட்டது. இது தொடர்பாக தான் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு, அவகாசம் கோரியதாகவும், ஆனால், நிர்வாகம் அனுமதிக்க மறுத்து விட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒருமுறை கால அவகாசம் வழங்கி, தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை காட்டிலும் இது சிறப்பாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.