சென்னை: தமிழகத்தில் வெங்காயம் விலை உச்சமடைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ள நிலையில், நாளைமுதல் ரூ.45க்கு அரசின் பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக ஆந்திரா, தெலுங்கானா உள்பட வட மாநிலங்களில் மழை பெய்து வருவதால், வெங்காய வரத்து குறைந்து உள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் கதக், ஹூப்ளி ஆகிய இடங்களில் நடப்பாண்டில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போதிய அளவிலான வெங்காய வரத்து இல்லை. இதனால் தமிழகத்தில் வெங்காய விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.50வரை உயர்ந்து கிலோ ரூ.100ஐ தாண்டியுள்ளது.
மேலும், தற்போது ஐப்பசி பிறந்துள்ளதால், திருமணம் உள்பட விஷேசங்களுக்கு வெங்காயத் தேவை அதிகரித்துள்ளதால், மேலும் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையடுத்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பெரிய வெங்காயத்தை கட்டுப்படுத்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் நாளை முதல் பெரிய வெங்காயத்தை பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மூலம் கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பெரிய வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் பசுமை கடைகளில் கிலோ ரூ. 45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது என்று தெரிவித்து உள்ளார்.