ஈரோடு: தமிழக அரசு பணிகளில் லஞ்ச லாவண்யம் தாண்டவமாடுவதை மீண்டும் உணர்த்தி உள்ளது இந்த சோகமான நிகழ்வு. வயதான மூதாட்டி ஒருவர், வாரிசு சான்றிதழ் வாங்க, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலரை அணுக, அவரோ லஞ்சம் கொடுத்தால்தான் வாரிசு சான்றிதழ் தருவேன் என கூற, செய்வதறியாது திகைத்த மூதாட்டி, லஞ்சம் கொடுக்க பணம் தேவை என பிச்சையெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியையும், அரசு அதிகாரிகளின் மனசாட்சியற்ற செயலையும் அம்பலப்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 63). கூலி தொழிலாளியான இவரது கணவர், மருமகன் ஏற்கனவே காலமான நிலையில், மருமகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மகனுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனால், தனது சொத்துக்களை, பேரக்குழந்தைகளின் பெயரில் மாற்ற முடிவு செய்த ஜோதிமணி அம்மாள், அனது ஊர் அருகே உள்ள மாத்துார் கிராம நிர்வாக அலுவலகம் சென்று விஏஓவிடம் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவர் மேற்படியை (லஞ்சம்) எதிர்பார்த்து, இழுத்தடிக்கவே, அவரை நேரடியாக சந்தித்து ஜோதிமணி அம்மாள் கேட்டுள்ளார்.
அப்போது, வி.ஏ.ஓ., வாரிசு சான்றிதழ் தர ரூ.3000 கொடுக்க வேண்டும் என்றும், அதை கொடுத்தால், டனே வாரிசு சான்றிதழ் தருவதாக தெரிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மூதாட்டி செய்வதறியாது திகைத்தார். இதையடுத்து, தனது பேரக்குழந்தைகளுடன் அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்றவர், ஒரு அட்டையில், வாரிசு சான்றிதழ் பெற லஞ்சம் கொடுக்க பணம் தேவை என எழுதி, பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினார்.
இதைகண்ட பலர், அந்த மூதாட்டிக்கு பணம் வழங்கிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்த தாசில்தார் மாரிமுத்து, ஜோதிமணி அம்மாளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்த கைவிடச் செய்தார். மேலும், தங்களுக்கு உடடினயாக வாரிசு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன், விஏவி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்தார்.
இந்த சம்பவ்ம அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகளின் லஞ்சப்போக்கு வயதான மூதாட்டியை பிச்சையெடுக்க தூண்டியது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் இதுபோன்ற அவலங்கள் என்று தீரும் என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.