சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை கோவிலில் கடந்த மார்ச் முதல் கொரோனா பரவல் காரணமாகப் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டது சுமார் 7 மாதங்களாக மாத பூஜைக்கு நடை திறக்கப்படும் போது பூஜைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களை அனுமதிக்கக் கோரிக்கை எழுந்தது.
அதன் அடிப்படையில் அடுத்த மாதம் தொடங்கும் மண்டல பூஜை காலத்தில் தினசரி 1000 பக்தர்களைக் கட்டுப்பாட்டுடன் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஐப்பசி மாத பூஜையின்போது தினமும் 250 பக்தர்களை அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் மலைக்கு வரும் முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆனலைன் முன்பதிவு தொடங்கிய இரு தினங்களிலேயே 5 நாட்களுக்கான முன்பதிவு முடிவடைந்துள்ளது. நாளை மாலை 5 மணிக்குச் சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக திறக்கப்படுகிறது. நாளை தீபாரதனை மட்டும் நடைபெற உள்ளது. 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற உள்ளது.
சுமார் 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு சபரிமலையின் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பம்பை நதியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஷவர் மூலம் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்குச் சபரிமலையில் தங்க அனுமதி இல்லாததால் தரிசனம் முடிந்தவுடன் மலையை விட்டுத் திரும்ப வேண்டும்.
[youtube-feed feed=1]