புதுடெல்லி:
ழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, கோவா மாநிலத்திற்கும் ஏன் கடிதம் எழுதவில்லை என காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா — காங்கிரஸ் — தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், பல்வேறு கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து, மாநில அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. இதையடுத்து, முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் பி.எஸ்.கோஷ்யாரி, நேற்று கடிதம் எழுதினார்.

அதில், ‘முதல்வராக பதவி ஏற்றதும், அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று, உத்தவ் தாக்கரே வழிபட்டார். ஹிந்துத்துவ கொள்கையில் அவ்வளவு பிடிப்புடன் இருந்தவர், திடீரென, மதசார்பற்றவராக மாறிவிட்டாரா… வழிபாட்டு தலங்களை திறக்க, ஏன் உத்தரவிடாமல் இருக்கிறார்’ என, குறிப்பிட்டிருந்தார். இதற்கு, பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘ஹிந்துத்துவா குறித்து, எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநிலத்தின் கொரோனா பரவல் நிலவரம் குறித்து, ஆலோசனை நடத்திய பின், வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்,’ என பதிலளித்தார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியதற்காக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ., ஆளும் கோவா மாநிலத்திற்கும் கவர்னராக உள்ள பி.எஸ்.கோஷ்யாரி, அங்கு கோவில்களை திறக்க ஏன் கடிதம் எழுதவில்லை என கேள்வி எழுப்பி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் கூறியதாவது: மதசார்பின்மை விவகாரம் குறித்து கவர்னர் கூறியிருக்கும் விதம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது சரியல்ல என நாங்கள் நினைக்கிறோம். கவர்னர் கடிதத்தில் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பாரா?.

கொரோனாவை கட்டுப்படுத்த உத்தவ் தாக்கரே அதிக கவனம் செலுத்துகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு கவர்னர் பாராட்ட வேண்டும். கோவாவில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு ஏன் கவர்னர் கடிதம் எழுதவில்லை?. இவ்வாறு அவர் கூறினார்.