சென்னை: ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணாமாக கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு இடங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு கிடந்தன. தற்போது தான் தளர்வுகள் அடிப்படையில் 90 சதவிகித முடக்கம் திரும்பப்பெறப்பட்டு உள்ளது. திருமண மண்டபங்கள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள வீடுகள், கடைகள், தொழில்நிறுவனங்கள், மண்டபங்கள் தங்களது சொத்துவரியை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு உரிய ரூ.6.50  லட்சம்  சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது.
ஆனால் ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக   சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில்,  பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்த முடியாமல் இருந்த திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்துள்ள   ரூ6.50 லட்சம் சொத்து வரியை  ரத்து செய்ய உத்தரவிடுமாறு நடிகர் ரஜினிகாந்த் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும்,  இதுதொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் இன்று விசாரிக்கிறார்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அப்பாவி மக்களே தங்களது வீடு மற்றும் தொழில்நிறுவனங்களின் வாடகைகளை செலுத்தி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கோடி கோடியாக சம்பாதிக்கும் ரஜினி, சொத்துவரியை கட்ட முடியாது என நீதிமன்றத்தை நாடியுள்ளது, அவரது மனநிலையை தோலூரித்து காட்டுகிறது.
ஏற்கனவே அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மாநகராட்சியில் இடத்தில் கடை வைத்துக்கொண்டு, அதை காலி செய்யவும், வாடகை செலுத்தவும் மறுத்து, அதற்கு காரணம், பணமதிப்பிழப்பு என்று கூறி மாய்மாலம் செய்தும், நீதிமன்றத்தால் மூக்கு உடைக்கப்பட்ட நிலையில், தற்போது ரஜினியும், அதே வழியை பின்பற்றி உள்ளார்.
சாதாரணமாக படம் ஒன்றுக்கு ரூ.100 கோடி வரை வருமானம் பெறும் ரஜினிகாந்த், கட்சித்தொடங்கப்போவதாக கூறி, தனது ரசிகர்களையும், தமிழக மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் நிலையில், தற்போது, அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியையும் செலுத்த மறுத்து தகராறு செய்து வருகிறார்.
லதா ரஜினிகாந்த் வாடகை விவகாரம் தொடர்பான செய்திகளுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…