அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் வன்கொடுமை & மரணம் தொடர்பான விசாரணையில் சம்பந்தப்படாத அதிகாரிகள், எந்த பொது அறிவிப்பும் கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை.
“பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பம் மற்றும் யூகத்தை தவிர்க்கும் வகையிலேயே இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், இது அவசியமான ஒன்று” எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், இந்த உத்தரவை அளிக்கும் முன்னதாக, உத்திரப்பிரதேச மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரஷாந்த் குமார், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக தெரிவித்த பொது கருத்து குறித்து அவருக்கு சம்மன் அனுப்பியது நீதிமன்றம்.
அதில், விசாரணையில் தொடர்பில்லாத ஒரு அதிகாரி இவ்வாறு கருத்து தெரிவிப்பது சரியான செயலா? என்று கேள்வி எழுப்பியிருந்த நீதிமன்றம், குற்றச் சட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தெரியாதா? என்றும் கடிந்து கொண்டது.
இம்மாதம் 1ம் தேதி, ஹத்ராஸில் எந்த பாலியல் வன்கொடுமை சம்பவமும் நடக்கவில்லை என்று கூறியிருந்தார் அந்த அதிகாரி. தனது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில், மரணமடைந்த 19 வயது தலித் பெண்ணின் உடலில் எந்த விந்துவும் காணப்படவில்லை என்று தடயவியல் அறிவியல் ஆய்வகம் அளித்திருந்த அறிக்கையை சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.