ஆந்திரா:
ந்திர முதலமைச்சர் ஓ எஸ் ஜெகன் மோகன் ரெட்டி நீதிமன்ற மூத்த நீதிபதிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததால், வழக்கறிஞர் ஒருவர் அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முதன்மை ஆலோசகரான அஜய் கள்ளம் முதலமைச்சர் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதியான என்வி ரமணாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் நொய்டாவை சேர்ந்த வழக்கறிஞரான சுனில் குமார் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு தொடுத்துள்ளார். மாநில முதலமைச்சராக ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இன்னொரு உச்சநீதிமன்ற நீதிபதி மீது குற்றம்சாட்டி கடிதம் எழுதுவது இதுவே முதல் முறையாகும், இது மிகவும் தவறான ஒரு செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கடிதம் அக்டோபர் 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அன்று ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துள்ளார், அது ஒரு வழக்கமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எழுதிய அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சில நீதிபதிகள் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும், எந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்பதில் உச்சநீதிமன்றத்தின் இரண்டாம் தலைமை நீதிபதியான என்வி ரமணாவின் தலையீடு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் இரண்டாம் தலைமை நீதிபதியான என்வி ரமணாவுக்கும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அமராவதி ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு ரமணாவின் மகள்களின் சில நில ஒப்பந்தங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்ததாகவும் தன்னுடைய ஏட்டு பக்க கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் மே 2019-ஆம் ஆண்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திர பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பின்பு சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கம் ஜூன்-2014 முதல் மே- 2019 வரை மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்ட பின்பு ஆந்திர மாநில நீதித்துறை விவகாரங்களில் நீதிபதி என்வி ரமணாவின் தலையீடு அதிகமாக உள்ளது என்று அக்கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கறிஞர் சுனில் குமார் சிங் வழக்கு தொடுத்துள்ளது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.