டெல்லி: வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுவின் அளவை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில், காற்று மாசு கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தடுப்பு நடவடிக்கைகள் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது: டெல்லியில் 700-800 ஹெக்டேர் நிலம் உள்ளது, அங்கு பாஸ்மதி அல்லாத நெல் பயிரிடப்படுகிறது. நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். விவசாயிகள் எந்த பணத்தையும் செலவிட வேண்டியதில்லை.
வடமாநிலங்கள் முழுவதும் காற்று மாசுபாட்டை சந்தித்து வருகின்றன. ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாத மத்திய அரசு தற்போது அவசர, அவசரமாக கூட்டம் நடத்துகிறது. காற்று மாசுபாட்டால், முழு வட இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று மணீஷ் சிசோடியா விமர்சித்தார்.