அறிவோம் தாவரங்களை – உளுந்து
உளுந்து.(Vigna mungo)
தெற்கு ஆசியா உன் தாயகம்!
சங்க இலக்கியத்தில் ‘உழுந்து’ மற்றும் ‘உந்தூழ்’ எனப் பவனி வந்த பசுமைச் செடி நீ!
மாடம், மாஷம் என இருவகைப் பெயர்களில் விளங்கிய இனிய செடி நீ!
பஞ்சாபி உணவுகளின் பாரம்பரிய உணவுப் பயிர் நீ!
வட இந்தியாவின் ‘தால் மக்கானி’யின் ஆதாரப் பொருள் நீ!
கருப்பு உளுந்து, வெள்ளை உளுந்து என இருவகை உளுந்தாய் எங்கும் விளங்கும் தங்கச் செடி நீ!
உடல் வலிமை, எலும்பு வலிமை, தசை,நரம்பு, இடுப்பு வலிமை, பொடுகு, உடல் சூடு, மன அழுத்தம், தாதுவிருத்தி, பித்தம், செரிமானம், வயிற்றுப்போக்கு, கூந்தல் வளர்ச்சி, மாதவிடாய், தாய்ப்பால் பெருக்கம், எலும்புருக்கி நோய் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை நிவாரணி நீ!
இட்லி, தோசை, அப்பளம், வடை, களி,கஞ்சி எனப் பல்வகை உணவுப் பொருள்களின் இனிய சுவைக்குக் காரணகர்த்தா நீ!
‘உழுந்தின் அகல் இலை அகல வீசி’ என நற்றிணை (89) போற்றும் நற்செடி நீ!
குறிஞ்சிப்பாட்டு, குறுந்தொகை, குறள் ஆகிய இலக்கியங்கள் போற்றும் இனிய செடி நீ!
பூப்பெய்தும் பெண்களுக்குப் பொலிவும் வலிவும் தரும் கஞ்சிக்கான உளுந்து செடி நீ!
உடலின் நச்சுகளை அகற்றும் மருந்துப் பயிர் செடியே!பாலுணர்வைத் தூண்டும் வயாகரா செடியே!
எலும்பு முறிவிற்கு ஏற்ற மருத்துவச் செடியே!
உடலை உரமாக்கும் உன்னதப் பயிர் செடியே!
அறுசுவை விருந்து உணவில் அழகு சேர்க்கும் ‘வடை’யின் மூலக் கலவையே!
அகத்தியர் போற்றும் அற்புத உளுந்து செடியே!
வாதம் போக்கும் உளுந்து தைலம் தரும் பயிர் செடியே!
இட்லி, தோசைகளின் இதயமே!
கால்நடைகளின் தீவனமே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.