புதுடெல்லி:
கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
சண்டே சம்வாத் 5ஆவது நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், தனது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளித்தார். கொவைட் -19 தொடர்பாகக் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தனது சாந்தினி சவுக் தொகுதி மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க தனது செல்போன் எண்-ஐ அமைச்சர் ஹர்ஷ வர்தன் பகிர்ந்துக் கொண்டார். வரவிருக்கும் திருவிழாக் காலங்களில், மக்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே கொண்டாடும்படியும், கூட்டத்தை தவிர்த்து, மத்திய அரசின் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொவைட்-19க்கு எதிராக போராடுவதுதான் முக்கியமான நடவடிக்கை என மக்களுக்கு நினைவூட்டிய மத்திய அமைச்சர், தொற்று பரவலைக் குறைப்பதும், உயிரிழப்பைத் தடுப்பதும் தான் தனது முக்கியமான பணி என்று கூறினார். கொவைட் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அடுத்த 2 மாதங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த மக்கள் இயக்க பிரசாரத்தில் மக்கள் இணைய வேண்டும் என ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார். கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 2000 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.
அறிவியல் மற்றும் தொழிற் ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கிய இந்த பெலுடா பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் பெங்களூரில் உள்ள அணுசக்தி துறையின் உயிரியல் தேசிய மையம் ஆகியவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொவைட் தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனை முடிந்து, 2ஆம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருவதாகவும், 3ஆம் கட்ட பரிசோதனை தொடரவுள்ளதாகவும், 2 மற்றும் 3 முறை போடப்படும் தடுப்பூசிகள் குறித்து தற்போது பரிசோதனை நடந்து வருவதாகவும் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
கொவைட் -19 ஒழிப்புப் பணிக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முதல் கட்டமாக ரூ.3000 கோடி வழங்கியதாகவும், 3 மாநிலங்கள் தவிர, பிற மாநிலங்கள் இந்த நிதியை முழுவதுமாக பயன்படுத்திவிட்டன எனவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். கொவைட் – 19 சிகிச்சையில் ஆயுர்வேத மருத்துவ முறைகளின் தாக்கம் குறித்து அறிவியல் ஆய்வுகள் தொடங்கியுள்ளதாகவும் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.