பாட்னா
மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் சிதைக்கு தீ வைத்ததும் அவர் மகன் சிராக் பாஸ்வான் மூர்ச்சை அடைந்து விழுந்துள்ளார்.
லோக் ஜன சக்தியின் நிறுவனரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் லோக் ஜன் சக்தி தலைவருமான சிராஜ் பாஸ்வான் மிகவும் துயரத்துடன் காணப்பட்டார்.
மக்கள் முன்னிலையில் அவர் தனது சோகத்தை மறைத்து தைரியமான முகத்துடன் இருந்தாலும் டில்லியில் அமைச்சர் இல்லத்துக்கு பிரதமர் மோடியை கண்டதும் அவர் தன்னை மறந்து குரல் எடுத்து அழுது விட்டார்.
அதைப் போல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராம் கிருபால் யாதவ் பாட்னா இல்லத்துக்கு வரும் போது மிகவும் அழுது விட்டார். சிராக் பாஸ்வானை யாதவ் குழந்தை பருவத்தில் இருந்தே அறிவார்.
கங்கைக்கரையில் உள்ள திகா காட் மயானத்தில் ராம்விலாஸ் பாஸ்வானின் சிதைக்கு தீ வைத்ததும் சிராக் பாஸ்வான் மயங்கி விழுந்துள்ளார். அவருடன் இருந்த அவரது உறவினர்கள் அவர் தரையில் விழும் முன்பு அவரை பிடித்து மேலும் சடங்குகளைச் செய்ய உதவி உள்ளனர்.
அவர் உறவினர் ஒருவர், “அவருக்கு அபாயம் ஏதும் இல்லை, இரு தினங்களாக அவருக்கு மன உளைச்சல் கரணமாகவும் கடும் சூடு மற்றும் வெப்பம் காரணமாகவும் மயங்கி விழுந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.