திருவனந்தபுரம் :
கேரள தங்க கடத்தல் வழக்கில் பிரதான குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மீது சுங்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத்துறை ஆகிய மூன்று அமைப்புகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு தங்க கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஸ்வப்னா மீது, “காபிபோசா” (அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு தொடர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் மீது சுங்க இலாகா, “காபிபோசா” சட்டத்தில் குற்றம் சாட்டி, வாரண்டு பிறப்பித்துள்ளது.
“காபிபோசா” சட்டத்தின் கீழ் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவரை விசாரணை இல்லாமல் ஒரு ஆண்டு தடுப்பு காவலில் வைக்கலாம்.
இதனிடையே ஸ்வப்னா மீது புதிய புகாரை போலீசார் தெரிவித்தனர்.
அவர், கேரள மாநில அரசின் ‘விஷன்டெக்’ நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் போலி சான்றிதழ்களை கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக கூறியுள்ள போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
– பா.பாரதி