பெங்களூரு :
டெல்லி பெங்களூரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு நடுவானில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக பேசப்படும் அதேவேளையில், விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவங்கள் குறித்து விமானி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
“விமானம் பறக்க தொடங்கி ஜெய்ப்பூரை நெருங்கும் வேளையில், இருக்கை எண் 1-சி யில் அமர்ந்திருந்த கர்பிணி பெண் ஒருவர் சிறிது அமைதியின்றி பரபரப்புடன் காணப்படுவதாகவும், அவர் காலை முதல் எதுவும் சாப்பிடவில்லை என்றும் விமான பணிப்பெண்கள் என்னிடம் தகவல் கொடுத்தனர்”.
“அவருக்கு சாப்பிட அல்லது குடிப்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று கூறிய, சிறிது நேரத்தில் அவர் வயிற்றுவலியால் துடிப்பதாகவும், மேலும் அமைதியின்றி சிரமப்படுவதாகவும் தகவல் தந்தனர்”
நிலைமை வேறுவிதமாக போவதை உணர்ந்து, உடனடியாக விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை விசாரிக்கச் சொன்னேன்.
“தெய்வாதீனமாக, இந்த விமானத்தில் இரண்டு கைதேர்ந்த மருத்துவர்கள் பயணித்தார்கள், ஒருவர் டாக்டர். நாகராஜ், ரியாத்தில் உள்ள கிங்ஸ் பாஹ்த் மருத்துவமனையில், பிளாஸ்டிக் சர்ஜனாக உள்ளவர்.
மற்றொருவர், பெங்களூரு க்ளவுட் நயன் மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவராக இருக்கும் டாக்டர். ஷைலஜா. முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு வாயு கோளாறு மற்றும் மலச் சிக்கல் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அவர் சீராகிவிடுவார் என்று கூறினர்.
ஆனாலும் அவர் சிரமப்படுவது அதிகரித்துக்கொண்டே இருந்தது, இரு மருத்துவர்களும், அவரை கவனித்துக்கொண்டே இருந்தனர். மகப்பேறு மருத்துவர் டாக்டர். ஷைலஜா -விடம் அவரை தீவிரமாக கண்காணித்துக் கொள்ளும்படி நான் கேட்டுக்கொண்டேன், அவரும் அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்.
விமானம் போபால் அருகில் சென்றுகொண்டிருந்த போது, அவருக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு கருகலைந்துவிட்டதாக அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வந்தது.
மிகவும் வருத்தத்துடன் விமானத்தை இயக்கிக்கொண்டு இருந்த போது, விமானத்தின் உள்ளே பரபரப்பு கூடியது, பணிப்பெண்கள் அங்குமிங்கும் ஓடினர், திறம்பட செயல்பட்டனர், முன்பகுதியை திரையிட்டு மூடினர், மருத்துவர்கள் சொல்வதற்கு ஏற்ப விமானத்தை மாற்றுப்பாதையில் இயக்க நான் காத்திருந்தேன்.
அப்போது, உள்ளே இருந்து கைதட்டல் சத்தமும் “குவா…குவா…” சத்தமும் என்னை உற்சாகப்படுத்தியது.
மிகுந்த சோகத்தில் இருந்த விமானப்பயணிகள் ஒவ்வொருவருக்கும் இது மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது என்றே கூறவேண்டும், ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர்கள் குறித்த தேதிக்கு முன் குழந்தை பிறந்ததாக கூறப்பட்டது, அந்த பயணி தான் 5 மாத கர்பமாக இருப்பதாக கூறியிருந்தார் என்று நினைக்கிறேன்.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினாலும், அவருக்கு எந்த நேரத்திலும் மருத்துவ உதவி தேவைப்படலாம் என்று கூறியிருந்தது, என்னை மேலும் கலக்கமடைய செய்தது.
நாங்கள், நாக்பூருக்கு அருகில் பறந்து கொண்டிருந்தோம், அடுத்ததாக இந்தூரிலோ அல்லது ஹைதராபாதிலோ தரையிறக்கலாம் என்று யோசித்திருந்தேன், பச்சிளம் குழந்தையையும் தாயையும் இந்த கொரோனா சமயத்தில் ஹைதராபாதில் இறக்குவதா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
அதற்குள், எங்கள் விமானத்தில் பறக்கும் பயணிகள் பட்டியலை திருத்தி அமைத்து, எங்கள் விமானத்தில் புதிதாக ஒரு பயணி பயணிப்பதை அனைவருக்கும் அறிவித்தேன்.
நாக்பூர் விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து மாற்றுப்பாதையில் பெங்களூருக்கு விரைந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், பிறந்த குழந்தை பற்றிய தகவலை பதிவு செய்தனர், இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இந்தியாவில் உள்ளூர் விமானத்தில் பிறக்கும் 7 வது குழந்தை இது, அதனால் படிவத்தில் FFS 007 என்று குறிப்பிடப்பட்டது.
எனது விமானத்தில் ஒரு 007 பிறந்தார் என்பது எனக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்கும் உற்சாகமளிப்பதாக இருந்தது.” என்று தனது அனுபவத்தை விளக்கினார்