மும்பை: விமான பயணத்தின்போது கர்ப்பிணி பெண்ணுக்கு நடுவானில், விமான ஊழியர்கள் துணையுடன் குழந்தை பிறந்தது. இதையொட்டி, அந்த குழந்தைக்கு வாழ்நாள் இலவச டிக்கெட் வழங்குவதாக இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். இவருக்கு பிரசவத்திற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில் விமானத்தில் சென்றபோது முன்னதாகவே திடீரென பிரசவ வழி வந்துள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது. அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தை வாழ்நாள் முழுவதும் இலவசமாக @ IndiGo6E இலவச டிக்கெட்டைப் பெறுகிறது.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.