புதுடெல்லி :
நிலக்கரி வெட்டியெடுத்து வர்த்தகத்தை மேம்படுத்த 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடப்போவதாக கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்த மூலம் 2.8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்றும் ஆண்டுக்கு ₹.20,000 கோடிக்கு வருமானம் கிடைக்கும் என்றும் பெருமைபொங்க பிரதமர் மோடி உறுதிகூறினார்.

இந்நிலையில், 41 நிலக்கரி சுரங்கம், ₹. 20,000 கோடி ஆண்டு வருமானம், 2.8 லட்சம் பேருக்கு வேலை ஆகியவை எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை வழங்குமாறு, எரிசக்தி ஆராய்ச்சியாளரும் சமூக நல ஆர்வலருமான சந்தீப் பாய் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் மத்திய நிலக்கரி துறை அமைச்சகத்தை கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள நிலக்கரித் துறை அமைச்சகம், “இந்த திட்டத்தை செயல்படுத்தும் முன் நடத்திய, கள ஆய்வுகள், திட்ட அறிக்கை, ஆலோசகர்கள் வழங்கிய குறிப்புகள், திட்ட வரவு செலவு கணக்கு போன்றவை எதுவும் தங்களிடம் இல்லை” என்று கூறியிருக்கிறது.
சுற்றுசூழல், பருவநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்திற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆய்வு பணிகளையும் மேற்கொள்ளாமல் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் திட்டம் என்ற பெயரில் மேடை போட்டு முழங்கி மக்களை ஏமாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று சந்தீப் பாய் கேள்வியெழுப்பியுள்ளார்.

முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது அது குறித்து மக்களுக்கு முறையாக அறிவிப்பு வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதிகளை கூட கடைபிடிக்காத இந்த அரசு எதன் அடிப்படையில் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும் 20,000 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் கிடைக்குமென்று கூறுகிறது என்று தெரியவில்லை.


மோடியின் வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்ற கேள்விக்கு மத்திய அரசின் எந்த ஒரு தரவிலும் பதில் இல்லாதது குறித்து சந்தீப் பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.