சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அறிவிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக நிகழ்ந்து வந்த பிரச்சினைக்கு அதிமுக தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த அறிவிப்பு ஆளும் கட்சியினருக்கும், அவர்களது கூட்டணி கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும், அதிமுக மீண்டும் உடைந்து சிதறும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கும், சசிகலா ஆதரவாளர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாகி இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை ஓபிஎஸ் அறிவித்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதேபோல் ஓபிஎஸ் கோரிக்கையான 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்ட்டுள்ளது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், அதிமுக அமைச்சர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜிகே வாசன்
கொங்குநாடு கட்சி ஈஸ்வரன்
அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன் பொன்னான நாள். அதிமுக தொண்டர்களும் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்த அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதற்கு இன்று பதில் கிடைத்துள்ளது. அதிமுக தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சி கொள்ள கூடிய வகையில் ஒருமித்த கருத்தாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எதிரிகள் துரோகிகள் புறமுதுகிட்டு ஓடும் வகையில் 2021 தேர்தல் வெற்றி அமையும்”என்றார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2021 ஆம் ஆண்டு சட்ட பேரவை தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும். அதிமுக ஆளப் போகிறது; மக்கள் வாழப் போகிறார்கள் என்றார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,
‘அதிமுகவில் குழப்பம் என்பதே இல்லை. பேசி தீர்த்துக்கொள்ள கூடிய சில கருத்துகள் இருக்குமே ஒழிய குழப்பம் ஏதுமில்லை. அம்மா இல்லாத காலத்தில் ஆட்சியையும், கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறோம். இயற்கை பேரிடர் காலத்தில் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம்.
முதல்வர் வேட்பாளர் குழப்பத்தால் நாங்கள் சரியாக பணியாற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் அதிமுக அரசில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். சசிகலா வந்த பிறகு அதிமுகவில் சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாது” என்றார்.
ஆர்.பி.உதயகுமார்
முதல்வரும், துணை முதல்வரும் தாங்கள் ராமர், லட்சுமணனை போன்றவர்கள் என்று மீண்டும் நிரூபித்துள்ளனர் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
தங்கத்தமிழ் செல்வன்
திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், ஈபிஎஸ், ஓபிஎஸ் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தாலும் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும் . அதோடு, அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் பிரச்சினை தீரவில்லை. பிரச்சினை இனிதான் தொடங்க போகிறது. இனி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் வேலை பார்க்க தொடங்குவார்கள் என கூறியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.