சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் நிர்வாகிகள் அங்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது ஜெயலலிதா சமாதியில், எடப்பாடி பழனிச்சாமி மண்டியிட்டு மரியாதை செலுத்தினார்.
கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நீடித்து வந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகள் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர்களும் அதிமுக மூத்த நிர்வாகிகளும் உடனிருந்தனர்.