திருபுவனம்: கீழடி அகழ்வராய்ச்சியில் 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தமிழர்களின் பண்பட்ட நாகரீக வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர்.
கீழடி அகழாய்வின் 6வது கட்ட அகழ்வராய்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6வது கட்ட அகழ்வாய்வு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கியது. துவங்கி செ செப்டம்பர் 30ம் தேதியுடன் நடந்த அகழாய்வு முடிவில் 16 அடுக்குகள் வரை கண்டறியப்பட்டது. தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது.
கீழடியில் தோண்டப்பட்ட 20வது குழியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகளால் கிணறு அமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அகரத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில், 26 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. மேலும, சுமார் 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதன் மூலம், இங்கு வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதேபோல், கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில், 4 குழந்தைகளின் எலும்பு கூடுகள், 14 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. எனவே இந்த இடம் பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் 5 அடி நீளமுள்ள எலும்பு கூடு முழுமையாக கண்டெடுக்கப் பட்டுள்ளது. மேலும் அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் சிற்பம், உறைகிணறு, சுடுமண் குழாய், தந்த தாயகட்டை, சூதுபவளம், அரசு முத்திரை, முத்து, பவளம், பாசி மணிகள், பானை ஓடுகள், சிறிய பானைகள், கருப்பு சிவப்பு வண்ண பானைகள் என 13 ஆயிரத்துக்கும் அதிகமான தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது 32 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே திருவள்ளுர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் என்ற இடத்தில் 28 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.