இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்தே ஆட்சி மொழி தொடர்பான சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவு இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இன்று வரையில் ஒரு தொடர்கதையாகவே உள்ளது என்று சொல்லலாம். பலமுறை அப்போராட்டம் இங்கு நடந்துள்ளது என்றாலும், அவற்றுள் 1965ஆம் ஆண்டு தமிழகமெங்கும் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டமே மிகப்பெரியது, வீரியம் மிக்கது, நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டது. எனவேதான், இந்தப் போராட்டத்தை இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று பொதுவாகக் குறிக்காமல், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று குறிப்பது பொருத்தமாக இருக்கும்.
B.G.Kher

1965இல், இப்போராட்டம் ஓர் உச்சகட்டத்தை அடைந்தது என்றாலும், அதற்கான வேர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பொதிந்து கிடக்கின்றன. 1955இல், மத்திய அரசினால், நியமிக்கப்பட்ட பி.ஜி.கேர் ஆணையம்(B.G.Kher Commission) கொடுத்த அறிக்கையே, நாடு முழுவதும் ஒரு பரவலான எதிர்ப்பை முதலில் உருவாக்கியது. அதன்பிறகு 1959இல், பிரதமர் நேரு கொடுத்த வாக்குறுதி அந்த எதிர்ப்பு நெருப்பைச் சற்றுத் தணித்தது என்றாலும், 1963இல் மத்திய அரசு முன்வைத்த ஓர் ஆணை, மீண்டும் போராட்டத்தைத் தமிழகத்தில் தூண்டியது. 1964ஆம் ஆண்டு, நேரு இறந்தபின்பு மீண்டும் மிகக் கடுமையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
1955ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஆட்சி மொழிச் சட்டம் குறித்த 344ஆவது பிரிவை ஆராய்ந்து அரசுக்கு எடுத்துரைக்க, மத்திய அரசினால், பி.ஜி.கேர் தலைமையில் ஓர் ஆணையம் நியமிக்கப்பட்டது. பி.ஜி.கேர், பம்பாய் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். அவர் இந்திப் பிரச்சார சபாவின் தலைவராகவும், இருந்திருக்கிறார். மிக உறுதியான இந்தி மொழி ஆதரவாளர். அக்குழுவில் நியமிக்கப்பட்ட மற்ற உறுப்பினர்களிலும், மிகப் பெரும்பான்மையானவர்கள், இந்திக்கு ஆதரவாகவே இருந்தனர். அக்குழு 1956ஆம் ஆண்டு, தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அதற்குப்பின் ஓராண்டு கழித்து, அவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் அரசு முன்வைத்தது.
இருமொழிக்கொள்கை நாட்டிற்கு தேவையில்லை என்றும், ஒருமொழிக் கொள்கையே எதிர்கால இந்தியாவை உருவாக்கத் துணை நிற்கும் என்றும், அந்த ஒரு மொழி இந்தியாகவே இருக்க வேண்டும் என்றும், பி.ஜி.கேர் ஆணையம் பரிந்துரைத்தது. எனவே, இந்தியை, ஒரு குறிப்பிட்ட கால எல்லை தீர்மானித்து, நாட்டின் ஆட்சி மொழி ஆக்குவது அவசியம் என்று ஆணையம் கருதியது. புதிதாக அரசுப்பணியில் சேருகின்றவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவ்வாணையம் சென்றது. இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியில் மட்டும் இருந்தாலே போதுமானது என்ற கருத்தைத் தெரிவித்து, நீதிமன்றங்களிலும் மிகவிரைவில் இந்தி மொழியை முழுமையாகக் கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஒரு மொழி ஆட்சி மொழி ஆவதற்கு, அது இலக்கிய வளமுடைய மொழியாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்றும், பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற மொழியாக இருந்தாலே போதும் என்றும், தங்கள் பரிந்துரைக்கான காரணத்தை ஆணையம் விளக்கியது.
ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எஸ்.கே.சாட்டர்ஜி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சுப்பராயர் ஆகிய இருவர் மட்டுமே தங்கள் மறுப்பைப் பதிவு செய்தனர். மேற்குவங்கத்தின் ராஷ்டிரபாஷா பிரச்சார சமிதியின் தலைவராக சாட்டர்ஜி இருந்த போதும், இந்தி பேசாத மக்களின் மீது இந்தியைத் திணிப்பது சரியன்று என்று எடுத்துக் கூறினார். எனினும் ஆணையத்தின் பெருபான்மையானவர்களின் கருத்து, இந்தியை உடனடியாக ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதனால்தான், பி.ஜி.கேர் ஆணையத்தின் பரிந்துரைகளை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களாக இருந்த ஈ.வி.கே.சம்பத், திருவண்ணாமலை தருமலிங்கம் இருவரும் உரையாற்றினர். அதற்குச் சமாதானம் கூறும் முறையிலேயே பிரதமர் நேரு, ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும்’ என்னும் உறுதியை ஈ.வி.கே.சம்பத்திற்குக் கடிதமாக எழுதி அனுப்பினார். அந்தக் கடிதத்தை ஓர் ஆவணமாக எடுத்துக் கொண்டு, அந்த எதிர்ப்பு அப்போது தணிந்தது.

ஆனால், நேரு அவர்கள் உயிரோடு இருக்கும் போதே, 1963ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள், இந்திய நாடாளுமன்றத்தில் அன்று உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, ஒரு சட்ட முன்வடிவை முன்மொழிந்தார். அப்போது அறிஞர் அண்ணா அவர்களும், நாடாளுமன்ற அவையில் உறுப்பினராக இருந்தார். சாஸ்திரி கொண்டுவந்த சட்டமுன்வடிவம், கீழ்க்காணுமாறு அமைந்தது.
‘1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும். இந்தி மொழிக்கு துணையாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், அது படிப்படியாக நீக்கப்பட்டுவிடும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசினர் வெளியிலும், மத்திய அரசின் சட்டங்கள், ஆணைகள், கட்டளைகள், நெறிகள் துணைச்சட்டங்கள் முதலிய அனைத்தும் இந்தியில் அமையும். மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் சட்டங்கள், ஆணைகள் மற்றும் கட்டளைகளை, மாநில அரசுகளின் ஏட்டில் இந்தியில் மொழி பெயர்த்து மாநில ஆளுநர் அனுமதியுடன் வெளியிட்ட பிறகே அவை அதிகாரப்பூர்வமானவை ஆகும்.”
இதனை மக்களவையில் திமுக உறுப்பினர்கள் நாஞ்சில் மனோகரன் க.ராசாராம் ஆகியோரும், மாநிலங்களவையில் அறிஞர் அண்ணாவும் கடுமையாகக் கண்டித்து உரையாற்றினர். எனினும் அரசு அக்கண்டன உரைகளைப் பொருட்படுத்தவில்லை. அதன்விளைவாகத் தமிழ்நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவைக் கொளுத்துவது என்று தி.மு.கழகம் முடிவெடுத்தது.
சென்னை கடற்கரையில் 26.4.1963 அன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், இறுதியாக உரையாற்றிய அண்ணா, மேற்காணும் முடிவை அறிவித்தார். ”இந்தித் திணிப்புக்கு அவர்கள் எவ்வளவு காலக்கெடு எடுத்துக் கொண்டார்களோ, எவ்வளவு வழிமுறைகளை வகுத்துக் கொண்டார்களோ அந்த வகையில் இதனை ஒரு நீண்ட காலப் போராட்டத் திட்டமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் ஒவ்வொரு பட்டிதொட்டிக்கும் சென்று இந்தி வருகிறது, அது தமிழர்களின்-திராவிடர்களின் தலையிலே இடி விழுவதற்கு ஒப்பாகும் என்று கூறி மக்களைப் பெரும் போராட்டத்திற்குத் திரட்ட வேண்டும்” என்று பேசினார்.
அதே ஆண்டு ஜூன் மாதம் 8> 9> 10 ஆகிய 3 நாள்களில் சென்னையில் நடைபெற்ற கழகத்தின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களில் சட்ட எரிப்புக்கான நாள் குறிக்கப்பட்டது. 1963 நவம்பர் 17ஆம் நாள் அறிஞர் அண்ணாவின் தலைமையில் டி.எம்.பார்த்தசாரதி, டி.கே.பொன்னுவேலு, வி.வெங்கா, கே.பி.சுந்தரம் ஆகியோர் அன்று மாலை கடற்கரையில் 17ஆவது சட்டப்பிரிவை பொதுமக்கள் முன்னிலையில் கொளுத்துவது என்று முடிவாயிற்று. அவர்கள் கைது செய்யப்பட்டால், அடுத்தடுத்த அணியினர் அதனைத் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்லத் தயார் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கழகத்தின் தலைமைக்கு உறுதி அளித்துக் கடிதம் அனுப்பினார்கள்.
 
நவம்பர் 16ஆம் நாள், காஞ்சியிலிருந்து அண்ணாவும், மற்ற நால்வரும் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். அடுத்தநாள் மாலை, திமுகவின் தலைமை நிலையமாக இருந்த இராயபுரம் அறிவகத்திலிருந்து பெரும் பேரணியாகப் புறப்பட்டு, கடற்கரைக்குச் சென்று, சட்டப்பிரிவைத் தீயிட்டு எரிப்பது என்பது திட்டம். ஆனால், 16ம் தேதி காலையே அண்ணாவின் மகிழுந்து, சென்னை அமைந்தகரை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, காவல்துறையினர் வழிமறித்து ஐவரையும் கைது செய்தனர். 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போராட்டம், 16ஆம் தேதி மதியமே தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ஊரிலும் திமுக தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

டிசம்பர் மாதம் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பில் அண்ணா, கலைஞர், மதுரை முத்து உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தலைவர்களுக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. அதனையொட்டி, நாடெங்கும் மீண்டும் கலவரங்கள் தொடங்கின.
1964ஆம் ஆண்டு ஜனவரியில் இன்னொரு வரலாற்று நிகழ்வு திருச்சியில் நடைபெற்றது. ஜனவரி 25ஆம் தேதி காலையில் முதலமைச்சர் பக்தவச்சலம் திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ஓர் இளைஞர் ஓடிவந்து, தன் கையிலிருந்த மண்ணெண்ணெய் டின்னிலிருந்த மண்ணெண்ணையைத் தன் உடம்பில் ஊற்றிக் கொண்டு, முதலமைச்சருக்கு முன்பாகவே தீக்குளித்தார். ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று உரக்க முழக்கமிட்டபடியே அவர் உடல் எரிந்தது. காவலர்கள் ஓடிவந்து, தீயை அணைக்க முயன்றும் அது பயனற்றுப் போய்விட்டது. அந்த இளைஞர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து மடிந்து போனார்.
 
அந்த இளைஞரின் பெயர் சின்னச்சாமி. அரியலூருக்கு அருகில் உள்ள கீழப்பழுவூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். அவர் உடம்பின் மீது பற்றி எரிந்த நெருப்புதான், 1965ஆம் ஆண்டு, பெருநெருப்பாகத் தமிழகமெங்கும் பரவியது என்று கூறலாம். தீக்குளித்து, தன்னைத்தானே தாய்த் தமிழுக்காக அழித்துக் கொண்ட இந்தத் தியாகம், போராட்ட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியது. திமுகவின் தொண்டரான சின்னச்சாமி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கான முன்னுரையைத் தன் தீ நாக்குகளால் எழுதினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகிலேயே சில புத்தபிட்சுகள்தான் இப்படிப்பட்ட தீக்குளிப்புப் போராட்ட முறையைக் கையாண்டனர் என்று கூறுவர். இரண்டாவது உலகப் போரில், ஜப்பானியர்கள் இருவர் எதிரியின் நீர்மூழ்கிக் கப்பலின் புகைக் கூண்டுக்குள் குதித்து அந்தக் கப்பலையே அழித்தனர். எனினும் இப்படிப்பட்ட போராட்ட முறை, அன்றைய சூழலில் தமிழகத்திற்குப் புதியதாகவே இருந்தது. அதனால்தான், அன்று தொடங்கி இன்று வரையில் மொழிப்போர் மேடைகளில், மாவீரன் கீழப்பழுவூர் சின்னச்சாமி பேசப்படுகிறார்.
மேடைகளில் மட்டுமல்லாமல், ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்திலும் சின்னச்சாமியின் பெயர் விவாதப் பொருளானது. அப்போது சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. முதலமைச்சர் பக்தவச்சலம், சட்டமன்றத்தில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். எதிர்க்கட்சியான திமுகவினர் தங்களின் துண்டறிக்கைகளில், இறந்து போன சின்னச்சாமியின் படத்தைப் போட்டு, வாக்குகளைக் கேட்கின்றனர். இது முறையற்ற செயல் என்று கூறினார். உடனே எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த தலைவர் கலைஞர் எழுந்து, இன்னொரு துண்டறிக்கையை எடுத்துக் காட்டினார். அது காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த துண்டறிக்கை. அதில் திருப்பதி வெங்கடாசலபதியின் படம் போடப்பட்டிருந்தது. ‘நீங்கள் பெரியசாமியின் படத்தைப் போட்டு வாக்குகள் கேட்கலாம் என்றால், நாங்கள் சின்னச்சாமியின் படத்தை போடக்கூடாதா?’ என்று கேட்டார். இவ்வாறாக, அன்று தொடங்கி இன்று வரையில் சின்னச்சாமியின் தியாகம் தமிழகத்தில் பேசு பொருளாக உள்ளது.
இதற்கிடையில் 1964ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் நேரு இறந்து போய்விட்டார். இந்தியா விடுதலை பெற்ற நாளில் தொடங்கி, 17 ஆண்டுகள், தொடர்ந்து பிரதமராக இருந்தவர் அவர். எனவே, அவருடைய மரணம் நாட்டில் ஒரு குழப்பத்தை உருவாக்கியது. புகழ்பெற்ற ஆங்கில ஏடு ஒன்று, ‘After Nehru, What?’ என்று கேட்டது. நேருவுக்கு பிறகு யார் என்று கேட்டால் அந்தக் கேள்வி இயல்பானது. ஆனால் அந்த ஏடு, நேருவுக்கு பிறகு என்ன என்று கேட்டது. அதாவது, நேருவுக்கு பிறகு இந்த நாடு என்ன ஆகும் என்பதே பெரும் கேள்வியாக இருந்தது. அந்த நேரத்தில்தான் லால்பகதூர் சாஸ்திரி அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் மாதம் 9ஆம் தேதி அவர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

சாஸ்திரி நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர். நேருவின் அமைச்சரவையில் தொடர்வண்டித் துறை, உள்துறை, வெளிஉறவுத்துறை என்று பல்வேறு துறைகளுக்கான அமைச்சராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர். எனினும் தீவிரமான இந்தி ஆதரவாளர். ஒரு நாட்டிற்கு, ஒரு மொழிதான் இருக்க வேண்டும், அதுதான் நாட்டை ஒருங்கிணைக்கும் என்னும் தவறான எண்ணத்தைக் கொண்டவர். அதனால், இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் அவர் உறுதிகாட்டினார். அதன் எதிர்விளைவுகளையும் சந்தித்தார்.
மொழிக் கொள்கையில், திமுக தவறான முடிவை எடுத்துவிட்டது என்றும், தமிழைக் கொண்டுவர வேண்டிய இடத்தில், ஆங்கிலத்தைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டது என்றும் இப்போதும் சிலர் குறை சொல்கின்றனர். அதேபோல, மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் கிடைத்த வெற்றியைத் திமுக பயன்படுத்திக் கொண்டுவிட்டது என்று கூறுவோரும் உள்ளனர். இரண்டு கூற்றுகளுமே உண்மைக்கு மாறானவை என்பதை வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள்.
தொடக்கத்திலிருந்தே திமுகவின் மொழிக் கொள்கையானது, தமிழுக்கு முற்றிலும் ஆதரவானது என்பதும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் கோரும் தன்மையுடையது என்பதும்தான் உண்மை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில், ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள 14 மொழிகளும், (இப்போது 22 மொழிகள்) அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்பட வேண்டும் என்பதும், அதுவரையில் ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதும்தான், திமுகவின் கொள்கையாக இருந்திருக்கிறது இதனை மாநிலங்களவையில் அண்ணா தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். அண்ணாவின் நாடாளுமன்ற உரைகளைப் படித்துப் பார்க்கும் எவருக்கும் இந்த உண்மை எளிதில் விளங்கும். அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவது நடைமுறை சாத்தியமில்லை என்று அரசு சொன்ன நேரத்தில்தான், வேறு வழியின்றி, அந்நிலை கைகூடும் வரையில் ஆங்கிலமும் நீடிக்கட்டும் என்று அவர் வலியுறுத்தினார். ‘நாங்கள் ஒன்றும் ஆங்கிலத்தின் மீதோ பிற அன்னிய மொழிகளின் மீதோ அடிமை மயக்கம் கொண்டவர்கள் இல்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணா பலமுறை பேசியிருக்கிறார். இந்திக்குப் பதிலாகத்தான் ஆங்கிலம் வேண்டும் என்று கேட்கப்பட்டதே அல்லாமல், தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தைத் திமுக ஒருநாளும் கோரவில்லை. இந்த உண்மையை நிறுவிட ஆயிரம் சான்றுகள் உள்ளன.
அதே போல போராட்டத்தை மட்டுமன்று, போராட்ட உணர்வையும், தமிழ்நாட்டில் தொடக்கி வைத்தது தி.மு.கழகம்தான் என்னும் உண்மையை எவராலும் மறைத்திட முடியாது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை, திமுக கழகம் எப்போது அறிவித்தது, மாணவர்கள் பேரவை எப்போது அறிவித்தது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை தெரியும். அதுமட்டுமல்லாமல், மாணவர் பேரவையை இயக்கிய மாணவர் தலைவர்கள் பலர் திமுகவினரே என்பதும், போராட்டத்தில் பங்கேற்று தடியடிகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் உள்ளாகி, தங்கள் வாழ்வையே பலி கொடுத்த மாணவர்களும் திமுகவின் எழுத்துகளாலும், பேச்சுகளாலும் உணர்வூட்டப்பட்டவர்களே என்பதும் வரலாறு கூறும் உண்மை.
அந்த 1965ஆம் ஆண்டு, போராட்ட வராலாற்றுக்குள், நாம் இப்போது நுழைகிறோம்.
(களங்கள்  தொடரும்)

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
பயன்பட்ட நூல்கள்
==================
பயன் பட்ட நூல்களின் விவரம், அடுத்த வார இறுதியில் தரப்படும்
Disclaimer: எங்கள் செய்தி இணையதளத்தில் வரும் தொடர்கள் யாவும் பத்திரிகை டாட் காமிற்கே பிரத்தியேக, தனிப் பிரசுர உரிமை வழங்கப்பட்டுள்ளது . எனவே, பத்திரிகை டாட் காமின் முன் அனுமதியின்றி இதனை முழுவதுமாகவோ இல்லை இதில் வரும் சில பகுதிகளையோ உங்கள் பயன்பாட்டிற்கு உபயோகிக்க அனுமதியில்லை.